ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை. கரோனா பாதிப்பால் உலகளவில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்களை இந்தியா அழைத்து வருவதில் சிரமங்கள் உள்ளன என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த சகாய சதீஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்:
ஈரான் நாட்டில் உள்ள ஷிரு, கிஷ் உள்ளிட்ட பல தீவுகளில் சுமார் 860 இந்தியர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலுக்காக அங்கு சென்றவர்கள். ஈரானிலும் கரோனா பரவி வருகிறது.
இதனால் ஈரான் தீவில் இருக்கும் இந்தியர்கள் பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தங்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினரை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து ஈரான் தீவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஈரான் தீவுகளில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி. புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குமரி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் ஈரான் தீவுகளில் இருக்கும் இந்தியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அங்குள்ள இந்தியர்களுக்கு மருத்துவம், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக உலகளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அந்த முயற்சி தடைபட்டுள்ளது. இருப்பினும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்டு, மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.