தான் ஒரு ஆசிரியராக அறியப்படவே அப்துல் கலாம் விரும்பினார் என்று அவரிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீஜன் பால்சிங் உருக்கத்துடன் கூறினார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று இரவு நடைபெற்றது. ‘மிடாஸ்’ கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், அப்துல் கலாமிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீஜன் பால்சிங் பேசியதாவது:
தன்னிடம் பணியாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை எல்லாம் நண்பர் என்றுதான் அப்துல் கலாம் அழைப்பார். பணிவின் ஒட்டுமொத்த உருவம் அவர்.
நமக்கு கிடைத்திருக்கும் கல்வி, படிப்பு, பதவி அனைத்தையும் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார். சாதி, மதம், இனம் இன்னும் சொல்லப்போனால் தேசம் கடந்து உலகில் உள்ள அனைத்து மக்களையும் நேசித்தார். வன்முறை சம்பவங்களின் போது மக்கள் கொல்லப்படுவதை நினைத்து மிகவும் வேதனைப்படுவார். நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியபோது மிகவும் மனம் வெதும்பினார்.
பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளின் போது மாணவர்களிடம் நீங்கள் யாராக அறியப்பட விரும்புகிறீர் கள்? என்ற கேள்வியை கண்டிப்பாக கேட்பார் கலாம். என்னிடமும் இதே கேள்வியை கேட்டிருக்கிறார். ஒருநாள் பதிலுக்கு நானும் அவரிடம் இதே கேள்வியை கேட்டேன். அதற்கு அவர், ‘நான் ஒரு குடியரசுத் தலைவராகவோ, ஏவுகணை விஞ்ஞானியாகவோ அறியப்படுவதைவிட கடைசி வரையில் ஒரு ஆசிரியராக அறியப் படவே விரும்புகிறேன்’ என்று சொன்னார்.
அவர் விரும்பியது போலவே நடந்துவிட்டது. மேகாலயாவில் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தான் அவரது உயிர் பிரிந்தது.
இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று அப்துல் கலாம் விரும்பினார். அவரது விருப் பத்தை நிறைவேற்ற ஒவ்வொரு வரும் பாடுபட வேண்டும். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சுவர்ணபூமி இசைப் பள்ளி குழந்தைகள் தங்கள் இசையால் கலாமுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.