கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் திருக்கோயில் நடைகள் அடைக்கப்பட்ட நிலையில் பெரிய மாரியம்மன் கோயில் முன்புறமுள்ள பூக்குழி குண்டத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுற்றிவந்து பூ (தீ) இல்லாத குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலைக் கடைபிடிக்கும் படி மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயில் பூக்குழி நடத்தப்பாடததால் முக்கிய திருவிழாவான பூக்குழி நேர்த்திக் கடனை நிறைவேற்ற பக்தர்கள் வெறும் குண்டத்தில் இறங்கி வழிபாடு செய்து வருகின்றனர்.
சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் பூக்குழி திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடங்கி ஒரு சில நாட்களிலேயே கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் திருக்கோவில்கள் மூடப்பட்ட நிலையில் பெரிய மாரியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு ஆறு கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் 13 நாட்கள் நடைபெறும் பூக்குழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 12 -ம் நாள் திருவிழாவான பூக்குழி இன்று நடைபெற வேண்டிய நிலையில் தமிழக அரசின் தடை காரணமாக இந்த வருடம் பூக்குழி திருவிழா கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து கடந்த 12 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயில் நடை சாத்தப்பட்டிருந்த போதும் வெளியிலிருந்தே சாமி தரிசனம் செய்து தங்கள் வழிபாட்டை செய்து வருகின்றனர்.
மேலும் 1000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் மஞ்சள் வேஷ்டி, சேலை அணிந்து பூ(தீ) இல்லாத குண்டத்தின் வழியாக இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
தீச்சட்டி எடுப்பார்கள் கையில் தீச்சட்டி ஏந்தியவாறு நான்கு ரத வீதி வழியாக சுற்றிவந்து கோயிலின் முன்பு தீச்சட்டிகளை வைத்திருக்கின்றனர். நேரம் அதிகரிக்கையில் கூட்டம் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் 100 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்கள் கூட்டமாக கூடுவதை கலைத்து வருகின்றனர்.
விரதம் இருந்தும் பூக்குழி இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் காப்பு கட்ட வேண்டிய பணமான ரூபாய் 21-ஐ உண்டியலில் செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
கரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை,குறிப்பாக லாக்-டவுனை தீவிமாக எடுக்கவில்லை. உங்களையும், குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆனால், மக்கள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டமாகக் கூடிக் கொண்டே இருக்கின்றனர்.