தமிழகம்

மலேசியா விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க வலுக்கும் கோரிக்கை

செய்திப்பிரிவு

மலேசியாவிலும், கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் விரைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சத்தால் மலேசிய விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் கரோனா வைரஸ் தாக்கம் கடுமையாகி வருவதை அடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக விமான போக்குவரத்துக்களை தடை செய்தன. இதனால் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள பயணிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

எனினும், ஈரானில் சிக்கிய 300-க்கும் மேற்பட்டவர்களை இந்திய அரசு மீட்டு வந்தது. அதேபோல் சிங்கப்பூரில் சிக்கிய மாணவர்களையும் மீட்டு வர நடவடிக்கை எடுத்தது.

கடந்த மார்ச் 17 அன்று மலேசிய விமானங்கள் இந்தியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் இந்தியர்கள் தவித்து வருவதாகவும் அவர்கள் தங்களை மீட்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களின் வாயிலாக கோரிக்கை விடுத்தனர். இதில் மருத்துவ மாணவர்கள் மட்டும் கடந்த மார்ச் 18 அன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்பினர்.



இது குறித்து மலேசியாவிலிருந்து தமிழகம் திரும்ப முடியாத நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது நமது செய்தியாளரிடம் கூறியதாவது,

இந்தியாவிலிலிருந்து வியாபாரம் மற்றும் சுற்றுலா நிமித்தமாக மலேசியா வந்துள்ள இந்தியர்கள் தாய் நாடு திரும்ப முடியாமல் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மலேசியாவில் தவித்து வருகின்றனர். 250க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தில் தங்கியுள்ளனர். மற்றவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் வெளி இடங்களில் தங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனர்கள் தமிழர்கள் ஆவர்.



இது குறித்து புகார் அளிக்க கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றேன். ஆனால் அதிகாரிகள் சந்திக்க மறுத்து விட்டார்கள். ஆனாலும், அனைவரும் பத்திரமாக நாடு திரும்ப தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

மலேசியாவிலும், கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் விரைந்து செயல்பட வேண்டும், என்றார்.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT