கிருஷ்ணகிரியில் பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை ஒதுக்கியதால், நியாயம் கேட்டு அந்த பெண் தனது ஒரு வயது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மபிரியா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர பாபு என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் சிறிது நாள் கழித்து ராஜேந்திரபாபுவின் அக்கா மற்றும் தங்கையும் அவர்களது கணவர் ஆகியோரும் சேர்ந்து, பத்மபிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இந்த நிலையில், பத்மபிரியாவுக்கும், ராஜேந்திர பாபுவுக்கும் பெண் குழந்ததை பிறந்துள்ளது.
தற்பொழுது, பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தினருடன் சேர்ந்து ராஜேந்திர பாபுவும் பத்மபிரியாவை ஒதுக்கி வைப்பதுடன் இரவு நேரங்களில் வீட்டுக்குள் சேர்க்காமல் வெளியில் நிறுத்துவது, சாப்பிட உணவு வழங்காமல் கொடுமைபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறி இன்று (மார்ச் 23) பத்மபிரியா தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், அங்கு வந்த போலீஸார் பத்மபிரியாவிடம் கோரிக்கை குறித்து கேட்டனர். அதற்கு பத்மபிரியா, தன்னை கொடுமை செய்தவர்களை தண்டிக்க வேண்டும், தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து போலீஸார் பத்மபிரியாவை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.