தமிழக சட்டப்பேரவை நடப்பது கூடும் அனைவரையும் பாதிக்கும் என்பதால் ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாததால் இன்று எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செவ்வாயுடன் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை மானியக்கோரிக்கைக்கான கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 9-ம் தேதிவரை நடக்கும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்பின்னர் நாடெங்கும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த சூழலில் சட்டப்பேரவையை ஒத்திவைக்க துரைமுருகன் கோரிக்கை வைத்தார்.
துரைமுருகனுக்கு 75 வயது என்பதால் பயம் வேண்டாம் தமிழகத்தில் சுகாதாரத்துறை சிறப்பாக உள்ளது என்று முதல்வர் பதிலளித்தார். அதன் பின்னர் பலமுறை ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
தமிழகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்தது, நாடெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. பொது இடங்களில் மக்கள் கூடுவதும் தடை செய்யப்பட்டது.
அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் 232 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி ஒரு இடத்தில் அமர்வது சரியல்ல, மேலும் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் கூட்டத்தொடரை ஒத்திவைக்க கோரப்பட்டது.
இதையடுத்து ஏப்-9க்கு நிறைவு என்பதை மார்ச் 31 வரை என மாற்றி அமைத்தார்கள். கூட்டத்தொடரையே ஒத்திவைக்கவேண்டும் என ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை ஒத்தி வைக்காததற்கு எதிர்ப்புத்தெரிவித்து வெளிநடப்புச் செய்தன.
இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை செவ்வாயுடன் நிறைவு செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.