தமிழகம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று (மார்ச் 23) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே உள்ள ஊரணிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்கா புரத்தில் இயங்கி வருகிறது.

இந்த ஆலையை சிவகாசியைச் சேர்ந்த தங்கையா என்பவர் லீசுக்கு எடுத்து பணி செய்து வந்தார். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது.

இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சிலர் மட்டும் பட்டாசு ஆலைக்கு வந்து பணியை தொடங்கியுள்ளனர். அப்பொழுது பட்டாசு ஆலையில் மருந்து கலவை செய்தபோது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சாத்தூர் அருகே உள்ள சிவந்திப்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி 49 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விருதுநகரில் ஒரே வாரத்தில் 2-வது பட்டாசு ஆலை விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT