தமிழகம்

கரோனா வைரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதல்வர் என்று பார்க்காது: ஏன் இந்த பிடிவாதம்?- விஜயதாரணி கேள்வி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கேரளா போல் குடும்பத்தில் நபர் ஒருவருக்கு ரூ 1000 மற்றும் ஒருவாரத்துக்கு தேவையான ரேஷன் பொருட்களை அரசு வீடுகளுக்கு கொண்டுச் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கோரிக்கை வைத்தார்.

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் அரசு சட்டப்பேரவை நிகழ்வு என்கிற பெயரில் 200-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் கூட்டி வைத்து நடத்துவது அனைவரையும் பாதிக்கும், வயதானவர்களே சட்டப்பேரவையில் அதிகம் என்பதால் சட்டப்பேரவையை ஒத்திவைக்கவேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கும் அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“தமிழக சட்டமன்றத்தை தொடர்ந்து நடத்தவேண்டும் என்று தமிழக அரசும் , சபாநாயகரும் பிடிவாதமாக இருக்கிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சித்தரப்பில் 200 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும், பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று பிரதமரே தொடர்ந்து கூறி வருகிறார்.

200-க்கும் மேற்பட்டவர்கள் கூடுவது கூடாது என்ற தடை இருக்கிறது. அப்படி இருக்கும்போது சட்டப்பேரவையில் 232 சட்டப்பேரவை உறுப்பினர்கள், பணியாளர்கள், ஊடகத்தினர், வந்து போகிறவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் வந்துச் செல்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்தத்தடை சட்டப்பேரவைக்கு பொருந்துமா இல்லையா என்று கேள்வி எழுப்பினோம்.

வைரஸ் கிருமிக்கு சட்டப்பேரவை என்பது தெரியாது, முதல்வர் என்றோ, பிரதமர் என்றோ தெரியாது. அனைத்தும் ஒன்றுதான். ஆகவே ஒருவரை ஒருவர் பாதிக்கக்கூடிய இடத்தில் கூடக்கூடாது என்று சொல்லும் அந்த எச்சரிக்கை சட்டப்பேரவைக்கு பொருந்தாது என்பதுபோல் முதல்வரும், சபாநாயகரும் இருந்து வருகிறார்கள்.

பலமுறை கூறியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரும் இங்கே இருக்கிறார்கள், பாதிப்பு வரும் என்று கூறியும் கேட்க மறுக்கிறார்கள். ஆனால் செவி சாய்க்காத இந்த அரசும், சட்டப்பேரவையும் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எனவே திமுக தலைவர் எடுத்த முடிவு சரியான ஒன்று. எங்களைப்பொருத்தவரை சட்டமன்றம் ஒரு பொதுமன்றமாக நோய்த்தொற்று ஏற்படும் காரணமாக இருப்பதால் பல்வேறு சட்டப்பேரவைகள் இந்தியா முழுதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறிய காலமே ஒத்திவைப்பு என்பது, ஆகவே இதை ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்காமல் சட்டமன்றத்தை நடத்தியே தீருவோம் என்று இருக்கிறார்கள். இங்கு சில கோரிக்கைகளையும் நாங்கள் வைக்கிறோம். கேரளாவில் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் என்று வழங்குகிறார்கள். குடும்பத்தில் எத்தனைப்பேரோ அத்தனைபேருக்கு ஆயிரம் ரூபாய் என்கிற நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அதே போன்று தமிழகத்திலும் செய்யவேண்டும், அதேப்போன்று ரேஷன் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் ஒரு வீட்டிற்கு எவ்வளவு தேவையோ வாரந்தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் அரசாங்கம் கொண்டுச் சேர்க்க வேண்டும்.

அதேபோல் செவிலியர்களுக்கு போக்குவரத்து பிரச்சினை பெரிய அளவில் உள்ளது,

அதை அரசு சரி செய்யவேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளவர்களுக்கு டிவி உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்படவேண்டும். காரணம் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக கூடாது அப்படி ஆளானால் அதுவே நோய் பாதிப்பு அதிகரிக்க காரணமாக அமையும்”.

இவ்வாறு விஜயதாரணி பேசினார்.

SCROLL FOR NEXT