மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேக்கரும்பு நினைவிடத்தில் மத்திய பொதுப்பணித் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடல் ராமேசுவரத்தில் பேக்கரும்பு என்னும் இடத்தில் அரசு வழங்கிய 1.32 ஏக்கர் நிலத் தில் கடந்த மாதம் 29-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கலாம் நினைவிடத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தினமும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
அப்துல் கலாம் மறைந்து 7-ம் நாள் நிகழ்ச்சி ராமேசுவரத்தில் அவரது பூர்வீக வீட்டில் நடைபெற்றது. அப்போது கலாமின் உதவியாளர் ஜெ.பொன்ராஜ், கலாமின் பேரன்கள் சேக் தாவூது, சேக் சலீம் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கலாம் நினைவிடத்தை மாணவர்கள், இளைஞர்கள் ஆய்வு நிறுவனமாக ஆக்கிட வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்களுக்கு என தலா 10 உறுதிமொழிகளை கலாம் கொடுத்திருக்கிறார். அவற்றை பேக்கரும்பு நினைவிடத்தில் கல்வெட்டுகளாக நிறுவ வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ராமேசுவரத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய பொதுப் பணித் துறை சார்பில் நில அளவீட்டுத் துறை அதிகாரிகள் ராமேசுவரம் அருகில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தை நேற்று அளவிட்டு ஆய்வு செய்த னர். இந்த ஆய்வு அறிக்கை மத்திய பொதுப்பணித் துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்த பின்னர் மணிமண்டபம் அமைப் பது தொடர்பான அறிவிப்புகள் முறையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.