தமிழகம்

மாணவர்கள் பாதுகாப்புடன் விளையாடுவதா?- 11, 12-ம் வகுப்பு தேர்வை உடனே ஒத்திவைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களே தேர்வை ஒத்திவைத்து விடுமுறை விட்டுள்ள நிலையில் மாணவர்கள் மாணவர்கள் பாதுகாப்புடன் விளையாடும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. உடனடியாக 11,12-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க பள்ளிக்கல்லூரிகள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத்தளங்கள், சுற்றுலாதளங்கள் மூடப்பட்டன.

அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை மட்டும் ஒத்திவைக்காமல் தமிழக அரசு அடம் பிடித்து வருகிறது. பிளஸ்டூ தேர்வு ஒத்திவைக்கப்பட்டால் அடுத்த கல்வியாண்டில் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்தி வைக்காமல் நடத்துவது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

இந்நிலையில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்காமல் அரசு பிடிவாதம் பிடிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசுக்கு மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை, கரோனா குறித்து அச்சம் இல்லை என சாடியுள்ளார்.

ஸ்டாலின் முகநூல் பதிவு:

“11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்திருப்பது கரோனா அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் அதிமுக அரசு விபரீத விளையாட்டு நடத்துவது கவலைக்குரியது மட்டுமின்றி-

கடும் கண்டனத்திற்கும் உரியது. ஆகவே மாணவர்கள் நலன் கருதி 11, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT