அமைச்சரவை செயலர் மற்றும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் கோவிட் - 19 நோயைக் கட்டுப்படுத்துதலில் தற்போதைய நிலவரம், மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி அதில் மத்திய அரசு சில ஆலோசனைகளை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.
கோவிட் - 19 கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மையில் தற்போதைய நிலவரம், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆயத்த நிலை குறித்து அமைச்சரவைச் செயலர் மற்றும் பிரதமரின் முதன்மைச் செயலர் ஆகியோர் காணொலி காட்சி மூலம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் உயர்நிலை ஆய்வு நடத்தினர்.
கடந்த சில தினங்களில், இந்த நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பற்றி ஆய்வில் விவாதிக்கப்பட்டது. அவசர மற்றும் செம்மையான தலையீட்டு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகள் வழங்கியது.
விரிவான விவாதங்களுக்குப் பிறகு, பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
* கோவிட் - 19 உறுதி செய்யப்பட்ட மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் இயங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில் மாநில அரசுகள் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு, மருந்துக் கடைகள், மளிகை பொருள் கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த அனைத்து செயல்பாடுகளையும் மூடுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
* மருந்துகள், தடுப்பு மருந்துகள், கிருமிநாசினிகள், மாஸ்க்குகள், மருத்துவ சாதனங்கள், அவற்றுக்கான துணை பாகங்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் / தொழிற்சாலைகளின் உற்பத்தி மற்றும் விநியோக சேவைகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கலாம்.
* மாநில அரசுகள் நிலைமையைப் பரிசீலித்து இந்தப் பட்டியலை நீட்டித்துக் கொள்ளலாம்.
* புறநகர் ரயில் சேவைகள் உள்பட அனைத்து ரயில் சேவைகளும் 2020 மார்ச் 31 ஆம் தேதி வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.
* அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடர்ந்து நடைபெறலாம்.
* அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் 2020 மார்ச் 31 ஆம் தேதி வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.
* மாநிலங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்தும் 2020 மார்ச் 31 வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.
* போக்குவரத்து சேவைகளை மிகக் குறைந்தபட்ச அளவில் இயக்கலாம்.
* இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை. ஆனால் நோய் பரவல் சங்கிலித் தொடர் பிணைப்பை உடைப்பதற்கு மிகவும் முக்கியமானவை.
* இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, ஏழைகள் மற்றும் சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு அசவுகர்யங்கள் மிகக் குறைந்த அளவு மட்டுமே இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன.
* தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் தங்கள் அலுவலர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிப்பதுடன், இந்த காலக்கட்டத்திற்கு அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கும்படி மாநில அரசுகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
* இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு தொழிலாளர் நலன் அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்துக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளது.
* நோய் பாதிப்பு என கண்டறியப்பட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களைக் கையாள்வதற்கான ஆயத்த நிலையை தீவிர விழிப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
* தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கான ஆயத்த நிலையை மாநிலங்கள் மதிப்பீடு செய்து, எந்தவிதமான தேவைகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
* கோவிட் - 19 நோயாளிகளைக் கையாள்வதற்கு மட்டும் என தனியான பகுதிகளை ஒதுக்கி வைக்கும்படி மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன.
* கோவிட் 19 பாதித்தவர்களைக் கையாள்வதற்கான வசதிகள் உள்ள மருத்துவமனைகளை ஒவ்வொரு மாநிலமும் அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்தக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.