தமிழகம்

தேனி உழவர்சந்தையில் நுகர்வோர்கள் உரசிக்கொள்வதை தவிர்க்க இடைவெளியுடன் கடைகள் அமைப்பு: கடைகளின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைப்பு

என்.கணேஷ்ராஜ்

தேனி உழவர்சந்தையில் நுகார்வோர்கள் உரசிக் கொள்வதைத் தவிர்க்கக் கடைகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு இடைவெளி விட்டு நுகர்வோர் கொள்முதல் செய்யும் வகையி்ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, தேவாரம் உள்ளிட்ட 7 இடங்களில் உழவர்சந்தை செய்பட்டு வருகிறது. இங்கு கரோனா வைரஸ் தடுப்பு முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தைக்குள் நுழையும் இடத்தில் கைகழுவ வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. சின்னமனூர் உழவர்சந்தை குறுகிய இடத்தில் இருப்பதால் இதனை வார சந்தை வளாகத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் தேனியில் நெரிசலைத் தவிர்க்க உழவர்சந்தை முன்பு 3 அடி இடைவெளியுடன் நுகர்வோர் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அடையாளக்குறியீடு இடப்பட்டுள்ளது. அதே போல் கடைகளின் முன்பு நின்று வாங்கவும் குறியீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டமாக அனுமதிக்காமல் சந்தைக்குள் 200 பேராக அனுப்பி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் 80 கடைகளில் 40-க்கு மட்டுமே தினமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு கடைவிட்டு ஒரு கடை என்ற அடிப்படையில் இக்கடை இன்று முதல் அமைக்கப்படும். மறுநாள் அடுத்த 40விவசாயிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்காக குலுக்கல் முறையில் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு காய்கறி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக வெளிமார்க்கெட்டில் காய்கறிகள் கிடைக்காதநிலையில் இவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உழவர்சந்தையில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT