3 மாவட்டங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்திருப்பதால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. அத்தியாவசிய தேவைகள் பாதிக்காவண்ணம் முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படா வண்ணம் அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை தொடர்ச்சியாக அனைத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒன்றாகப் பயணம் செய்வதைத் தடுக்க ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மாலை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களுக்குக் கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பொதுமக்கள், சாதாரண எளிய மக்கள் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
“கரோனோ வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை மார்ச் 31-ம் தேதி வரை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், முதல்வர் உடனடியாக ஆலோசனை நடத்தி, மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாதவாறு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள், இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நாளை முதல் ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.