மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கங்கள் மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.
ஆனால், சீனாவில்தானே கரோனா பாதிப்பு வந்துள்ளது நமக்கென்ன என்று உலக நாடுகள் பலவும் அலட்சியமாகச் செயல்பட்டன. முக்கியமாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலம் இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகள், ஈரான், மேற்காசிய நாடுகளுக்கு வேகமாகப் பரவியது.
அமெரிக்காவையும் அது விட்டு வைக்கவில்லை. தாமதமாக விழித்துக்கொண்ட நாடுகள் மக்களுக்கு விழிப்புணர்வை அளித்தபோதும் தனிமைப்படுத்துதலை அலட்சியப்படுத்திய மக்களால் இன்னும் வேகமாகப் பரவியது.
இதன் விளைவு கரோனாவின் மோசமான மூன்றாவது கட்டமான சமுதாயப் பரவல் கட்டற்றுப் பரவும் நிலைக்கு பல நாடுகள் ஆளாயின. இத்தாலியும், ஈரானும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இங்கு கொத்து கொத்தாக மரணம் நிகழ்ந்தது. இன்று செய்வதறியாமல் அந்த நாடுகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. இதேபோன்ற நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றன.
இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் மக்கள் மார்ச் 31-ம் தேதி வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.
பிரதமர் மோடி இன்று ஒருநாள், மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று இந்தியா முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அனைத்து ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மார்ச் 31-ம் தேதி வரை கடும் முன்னெச்ச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் சில மாநிலங்கள் தங்களைத் தாங்களே துண்டித்துக் கொள்கின்றன.
தமிழகம் அண்டை மாநில எல்லைகளை மூடி வாகனப் போக்குவரத்துக்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில் உள்நாட்டுப் போக்குவரத்திலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்தில் தற்போது கட்டுப்பாட்டை முதல்வர் அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பு:
“தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
* சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்சேவைகள் இன்று முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை நிறுத்தப்படுகிறது.
* மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை நிறுத்தப்படுகிறது.
தமிழக அரசு எடுத்துவரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி, அரசுடன் இணைந்து செயல்படுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.