பிரதமரின் வேண்டுகோள்படி கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மருத்துவர்கள், செவலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. நகர்ப்புறம், கிராமப்புறங்களில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. அதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டமே இல்லை. அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கும்வகையில் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை.
இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதற்காக இரவு பகல் பாராது பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டின்முன் நின்று கைதட்டவேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இன்று மாலை 5 மணிக்கு வீட்டின் முன்பு நின்று பலரும் தங்கள் கைகளைத் தட்டி நன்றி தெரிவித்தனர்.