"தனியார் மருத்துவமனை பணிக்கு செல்லக்கூடாது" என்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்கு மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரழிந்துள்ளனர். தமிழகத்தில் 7 பேருக்கு இதுவரை ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமெடுக்கும்பட்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவக்குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ‘கரோனா’ சிறப்பு சிகிச்சை வார்டுகள் 24 மணி நேரமும் பணிபுரிய மருத்துவ குழுவினர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் அனைத்து துறை புறநோயாளிகள், உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை சுழற்சி முறையில் பணிக்கு வர சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் நேற்று முதல் மருத்துவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சுழற்சி முறையில் பணிக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குவதற்கு செல்லக்கூடாது என்று இன்று தடை விதித்துள்ளது. இதற்காக அரசாணை பிறப்பித்து அதனை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு அரசு அனுப்பி உள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர், மருத்துவப்பணியாளர் ஒருவருக்கு வந்தால் உடனே மற்ற அனைவருக்கும் பரவும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக அனைவரும் பாதிக்கப்பட்டால் கரோனா வைரஸ் தீவிரமடையும்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
அதனால், மருத்துவர்கள், சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் பணிக்கு வராமல் வீட்டில் இருக்கும் நாட்களும் மருத்துவர்கள் ‘ஆன் டியூட்டி’ அடிப்படையில் பணிக்கு வந்ததாகவே கருதப்படும்.
மருத்துவர்கள் சேவை தற்போது மக்களுக்கு அதிகம் தேவைப்படுவதால் அவர்கள் பணிக்கு வராமல் வீட்டில் இருக்கும்போது தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை பணிதவிர மாலை நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்க செல்வார்கள்.
அப்படிச் செல்லும்போது, தனியார் மருத்துவமனைகளில் யார் மூலமாவது அரசு மருத்துவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வரும்போது அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. அதனால், தற்காலிகமாக அரசின் மறு உத்தரவு வரும்வரை தனியார் மருத்துவமனை பணிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
எந்த நேரத்திலும் அவசரப் பணிக்கு அழைக்கப்படலாம். அதனால், பணிபுரியும் இடங்களேதங்கியிருக்க வேண்டும். தங்கள் செல்போன்கள் தொடர்பு கொள்ளும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.
அரசாணையின் சில முக்கிய அம்சங்கள்:
* வரும் 24-ம் தேதி சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பகுதி மருத்துவர்கள் கட்டாயமாக ஒரு வாரம் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* இதற்கான பெயர் பட்டியலை டீன் தயாரித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
* டீன் அல்லது மருத்துவ மையத் தலைமை பிறப்பிக்கும் திட்டமிடலை மருத்துவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
* மருத்துவர்கள் அனைவரும் மாவட்டத் தலைநகரிலேயே இருக்க வேண்டும். அவர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு அழைக்கப்படலாம்.
* ஒருவார சுழற்சி முறை தனிமைப்படுத்துதல் முடிந்தவுடனேயே பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் ஆன் ட்யூட்டி ரத்து செய்யப்படும்.
* தனிமைப்படுத்துதலில் உள்ள மருத்துவர்கள் தனிப்பட்ட கிளினிக்குகளிலோ அல்லது வேறு தனியார் மருத்துவமனைகளிலோ மருத்துவப் பணி புரியக் கூடாது.
* சிறப்பு மற்றும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் ஒருவேளை 3-க்கும் குறைவாக மட்டுமே மருத்துவர்கள் இருந்தால் அவர்களை ஒட்டுமொத்தமாக சிறப்புச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் என்ற அடிப்படையில் வரையறுத்து தனிமைப்படுத்துதலுக்கான பெயர்ப் பட்டியலைத் தயார் செய்யலாம்.