கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருத்துவர்கள், காவல்துறையினர் செய்து வரும் சேவையைப் பாராட்டி தேனியைச் சேர்ந்த ஆசிரியை கோலம் வரைந்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் இன்று சுயஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளும் வெறிச்சோடியது.
இருப்பினும் மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள், போலீஸார், பத்திரிகையாளர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் விநியோகிப்பவர்கள் உள்ளிட்ட பலரும் பொதுமக்களுக்காக இன்று சேவைப்பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக பலரும் பாராட்டு தெரிவித்து வரும் வேளையில் தேனியைச் சேர்ந்த ஆசிரியை அமிர்தா தனது கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
பாரஸ்ட்ரோட்டில் உள்ள தனது வீட்டில் இதற்காக உருவக்கோலம் ஒன்றை வரைந்திருந்தார். இதில் இந்தியர்கள் அனைவரும் இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருந்து இந்தியாவை கரோனா வைரஸ் தொற்றி்ல் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையி்ல் இந்த கோலம் வரையப்பட்டிருந்தது.
இதில் மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்திய வரைபடத்தைச் சுற்றி நின்று காப்பாற்றுவது போலவும், கரோனா வைரஸ் இவர்களை எதிர்கொள்ள முடியாமல் விலகி ஓடுவது போலவும் வரையப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பலரும் பாராட்டினர்.
இது குறித்து ஆசிரியை அமிர்தா கூறுகையில், வழக்கமான கோலத்தில் இருந்து மாறுபட்ட உருவக்கோலங்களை அதிகளவில் வரைந்து வருகிறேன். சுவாமிபடங்கள் மட்டுமல்லாது, இயற்கைக் காட்சி, விழிப்புணர்வு கருத்துக்கள், பறவைகள் என்று உருவ வடிவில் கோலமிட்டு வருகிறேன்.
தற்போது கரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக காவல்துறை, தூய்மைப்பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவது என்னை நெகிழச் செய்து விட்டது.
எனவே அவர்களைப் பாராட்டும்வகையிலும், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கோலத்தை வரைந்துள்ளேன். இதைப் பார்த்த பலரும் கரோனாவை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினர். இது எனக்கு மிகவும் மனநிறைவாக உள்ளது என்றார்.