தமிழகம்

பேராவூரணி அருகே துணிகரம்: கடலூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் 55 பவுன் நகைகள் கொள்ளை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கடலூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் 55 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள அன்புச்செல்வனின் சொந்த ஊரான நாடியம் பேராவூரணி அருகே உள்ளது. நாடியத்தைச் சேர்ந்த செல்வம்(62) என்பவர் அன்புச்செல்வனின் வீட்டைப் பார்த்துக் கொள்கிறார். நேற்று முன்தினம் இரவு செல்வம் வீட்டின் முன்பு படுத்திருந்தார்.

சிசிடிவி கேமராக்கள் உடைப்பு

பின்பக்க காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 55 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர்.

தங்களைப் பற்றிய துப்பு கிடைக்காமல் செய்வதற்காக வீட்டின் முன்பக்கம், வீட்டின் உள்ளே இருந்த 5 சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் உடைத்ததுடன், அவற்றை கண்காணிப்பதற்காக வைத்திருந்த டி.வி., சிசிடிவி ரெக்கார்டர் ஆகியவற்றை வீட்டின் பின்பக்கம் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை இதைக் கண்ட செல்வம், அன்புச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததோடு, தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT