தமிழகம்

தமிழகத்தில் இனி பெண் சிசுக்கொலை நடைபெறாத வகையில் நடவடிக்கை: அமைச்சர் வி.சரோஜா பேரவையில் உறுதி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இனி பெண் சிசுக்கொலை நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூகநலத் துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய திமுக உறுப்பினர் கீதாஜீவன், ‘‘பெண் சிசுக்கொலையைத் தடுத்து, பெண் குழந்தைகளைக் காக்கவும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அறிவியல் விஞ்ஞானம் முன்னேறிய காலத்தில் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகள் கொல்லப்படும் சம்பவங்கள்நடந்திருப்பது அரசின் செயல்பாட்டுக்கு கரும்புள்ளியாகும். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும். பெண் கருவுற்றதில் இருந்து அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச் சர் வி.சரோஜா பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்று 1992-ம்ஆண்டு கொண்டுவந்த தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமாகும். மகளிருக்கு அதிகாரம் அளித்தல், பெண் குழந்தைகள் நலன் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இத்திட்டங்களைக் கொண்டு வந்தார்.

இத்திட்டத்தில் இதுவரை 4,162பெண் குழந்தைகளும், 1,189 ஆண்குழந்தைகளும் மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டு தத்து வளர் மையங்கள் மூலம்மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஏற்றுக்கொள்ள விரும்பும் பெற்றோருக்கு தத்து கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகள் பாதுகாப்புதிட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 75 ஆயிரத்து 490 பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வைப்புநிதியாக ரூ.1,479 கோடி மின் விசை நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளிப்பால் கொடுத்த சம்பவம்நடைபெற்ற செய்தி அறிந்ததும் கள ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர், சமூக நல அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்ற உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT