கோயில், திருமண மண்டபங்களில் இன்று நடைபெறவிருந்த திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், முக்கிய கோயில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், வரும் 31-ம்தேதி வரை திருமண மண்டபங்களில் ஏற்கெனவே பதிவு செய்த நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் திருமணத்தை நடத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள திருமண மண்டபங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த10-க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில திருமண மண்டபங்களில் பதிவு செய்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 50-க்கும் குறைவானவர்கள் பங்கேற்கும் வகையில் திருமணத்தை நடத்த திருமண மண்டப உரிமையாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
இவ்வாறு, நடைபெறும் திருமணங்களுக்கு வருபவர்கள் கைகளை சுத்தமாக கழுவிய பின் முக கவசங்களை அணிந்துவர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், குன்றத்தூர் முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இன்று நடைபெறுவதாக இருந்ததிருமணங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. திருமணத்தை பதிவு செய்தவர்களிடம் மாற்று தேதியில் திருமணத்தை நடத்தி கொள்ளலாம் அல்லது பதிவு செய்ய செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.