கரோனா வைரஸ் பரவலை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தேவையற்ற நுழைவாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்களில் கிருமிநாசினி தெளிப்பு, பயணிகளிடம் தீவிர பரிசோதனைகள் செய்தல், ஒரே இடத்தில் பயணிகள் அதிக அளவில் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோல், பிரதான நுழைவாயில்களில் மட்டும் மருத்துவர்களின் தலைமையில் செவிலியர்கள், பயணிகளை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே அவர்களை அனுமதிக்கின்றனர். எனவே, தேவையற்ற நுழைவாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன் நுழைவு பகுதிகளில் 2 இடங்களிலும், பின்பகுதியில் ஒரு இடத்திலும் அனுமதிக்கப்படுகிறது.
தேவையற்ற 2 நுழைவாயிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல், எழும்பூர் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு பகுதிகளில் 3 இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மற்ற இடங்களில் இருந்த 3 நுழைவாயில்கள் மூடப்பட்டன. ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்து வருவதால், தேவையற்ற நுழைவு பகுதிகளை தற்காலிகமாக மூடியுள்ளனர். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.