நாகை மாவட்டம் வேளாங்கண்ணி யில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை சிறப்பாக கொண்டாட பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகப் புகழ்பெற்ற வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்த பேராலய நிர்வாகம், காவல் துறை, வருவாய்த் துறை, மாவட்ட நிர்வாகம் என அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டு வருகின்றன.
வேளாங்கண்ணியில் திருவிழா வின்போது, ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த நகருக்கு வெளியே மின் விளக்கு, குடிநீர், கழிப்பிட வசதிகளுடன் தற்காலிக வாகனம் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை மூலம் நகரின் நுழைவாயில், பேராலயப் பகுதி, பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றவும், அவசர கால மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ளவும் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கடற்கரையில் வேளாங்கண்ணி பேருராட்சி சார்பில் தடுப்புவேலி அமைக்கப்பட உள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அனைத்து வகையான உபகரணங்களுடன் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையில் தயார் நிலையில் இருப்பர். தண்ணீரில் செல்லும் மோட்டார் சைக்கிள் வீரர்கள் கடலுக்குள் யாரும் இறங்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
நகரில் முக்கிய இடங்களில் காவல்துறை சார்பில் 15 கண்காணிப்பு கேமராக்களும், பேராலயம் மூலம் 40 கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட் டுள்ளன.
போக்குவரத்துத் துறை மூலம் பல்வேறு நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் 650 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பல்வேறு இடங்களிலும் அமைக் கப்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தொட்டிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து, கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்பட உள்ளது.
நடமாடும் தானியங்கி ஏடிஎம் நிலையங்களை நிறுவ வங்கி களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த ஆண்டு வேளாங் கண்ணிக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி வழிபட்டுச் செல்லவும், ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அதை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.