தமிழகம்

சசிபெருமாள் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காந்தியவாதி சசிபெருமாள் கன்னியா குமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கடந்த 31-ம் தேதி செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய போது உயிரிழந்தார்.

சேலத்திலிருந்து சசிபெருமாளின் உறவினர்கள் கடந்த 1-ம் தேதி நாகர்கோவிலுக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து சசிபெருமாளின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீஸார் முயன்றனர்.

ஆனால், அவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். தமிழக அளவில் மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வெளியானால் மட்டுமே சசிபெருமாள் உடலை வாங்குவோம் எனக்கூறி சேலத்துக்கே புறப்பட்டுச் சென்றனர்.

சேலத்தில் அவர்களை அதிகாரிகள் சந்தித்து சமாதானம் பேசினர். ஆனால், தங்களின் முடிவில் உறுதியாக இருக்கும் சசிபெருமாள் குடும்பத்தினர், மதுவிலக்கு குறித்து தமிழக அரசு அறிவித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.

நேற்று முன்தினம் சசிபெருமாள் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் இன்று 3-வது நாளாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை பிணவறையில் அவரது உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் ஆகியோர் நேற்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசு விளக்கம் அளிக்க வேண்டும்

சேலம்

மேட்டுக்காட்டில் உள்ள சசிபெருமாள் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சசிபெருமாளின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருந்தால், சசிபெருமாள் உயிரிழந்திருக்க மாட்டார். செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறக்கும் போது சசிபெருமாள் உயிருடன் இருந்தாரா? அல்லது கீழே வந்ததும் உயிரிழந்தாரா? என தமிழக அரசு விளக்க வேண்டும். சசிபெருமாளின் குறைந்தபட்ச கோரிக்கையான கோயில், பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இடத்தில் உள்ள மதுக்கடைகளையாவது தமிழக அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT