‘கரோனா’ வைரஸ் அச்சத்தால் 2 முதல் 3 வாரங்களுக்கு தேவையான காய்கறிகளை மக்கள் மொத்தமாக வாங்கிக் குவிப்பதால் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. தக்காளி இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
‘கரோனா’ வைரஸ் பரவுவதை தடுக்க இன்று ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அதனால், நாளை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர மாட்டார்கள். தற்போது நாடு முழுவதும் ‘கரோனா’ வைரஸ் பரவுவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டுமில்லாது அடுத்தடுத்து சில வாரங்கள் மக்கள் வெளியே நடமாடுவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளது.
மளிகைப்பொருட்கள், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். அதனால், 2 முதல் 3 வாரங்களுக்கு மொத்தமாக மக்கள் அரிசி, மளிகைப்பொருட்கள், பழங்கள்மற்றும் காய்கறிகளை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதனால், சந்தைகளில் கடந்த சில வாரமாக விலை வீழ்ந்து கிடந்த காய்கறிகள் இன்று திடீரென்று பல மடங்கு உயர்ந்தது.
மதுரை மாட்டுத்தாவணி சென்டரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ‘‘மார்க்கெட்டிற்கு நேற்று ஒரே நாளில் 40 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது.
இதில், தக்காளி மட்டும் 15 லாரிகளில் வந்தன. சமீப காலங்களில் இன்று வியாபாரம்அருமையாக இருந்தது. தக்காளி 2 நாளுக்கு முன் வரை 13 ரூபாக்கு விற்றது. நேற்று ஒரே நாளில் 10 ரூபாய் விலை உயர்ந்து 23 ரூபாய்க்கு விற்றது.
கருவேப்பல ரூ.40, மல்லி ரூ.20, புதினா ரூ.15, இஞ்சி ரூ.60, பச்சை மிளகாய் ரூ.20, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.50, உருளைகிழங்கு ரூ.25, தேங்காய் ரூ.20, கரட் ரூ. 30ர, பீன்ஸ் ரூ.40, சவ்சவ் ரூ.15, பீட்ரூட் ரூ.12, பச்சை பட்டானி ரூ.50, பட்டர் பீன்ஸ்ரூ.140, சோயா ரூ.110, அவரைக்காய் ரூ.50, கத்திரிக்காய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.30, முருங்கக்காய் ரூ.30, பாகற்காய் (பெரியது) ரூ.30, (சிறியது) ரூ.70 வரை விற்பனையானது. காய்கறிகள் விலை இன்னும் அடுத்தடுத்த நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளது, ’’ என்றார். இதே காய்கறிகள் சில்லறை விற்பனை கடைகளில் இன்னும் ஒரு மடங்கு விலை அதிகமாக விற்கிறது.