அமைச்சர் சி.விஜயபாஸ்கர் | கோப்புப் படம். 
தமிழகம்

மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று; தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேலும் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு இந்திய அளவில் 285-ஐக் கடந்த நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக இருந்தது. ஏமனிலிருந்து வந்த காஞ்சிபுரம் பொறியியல் பட்டதாரி ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த வட மாநில இளைஞர் ஒருவருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தங்கியிருந்த 8 பேர் மற்றும் ரயிலில் உடன் பயணம் செய்தவர்கள் எனப் பலரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் மூன்றாவதாக அயர்லாந்திலிருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆனது.

இந்நிலையில் இன்று திடீரென ஒரே நாளில் 3 பேர் கரோனா வைரஸால் பாதிப்புக்குளானது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிவு:

''கரோனா தொற்று ஏற்பட்ட 3 பேர் தற்போது கண்டறியப்பட்டுள்ளனர். 2 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் நியூசிலாந்திலிருந்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுவரை நோய்த்தொற்றுடன் கண்டறியப்பட்ட அனைவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்த பயணிகளே. அவர்கள் மூலமே சென்னைக்குள் கரோனா தொற்று ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இதைத் தவிர சமுதாயத் தொற்றாக ஏதும் நிகழவில்லை. புதிதாகக் கண்டறியப்பட்ட 3 பேரும் ஏற்கெனவே கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர்.

அவர்களுக்கான கரோனா சோதனையில் நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவுடன் அவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. துறைமுகம், விமான நிலையத்தில் உள்நாட்டு வருகை, ரயில் பயணிகள், மாநில எல்லைகளைக் கடப்பவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்''.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT