தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்குக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த வந்த காங்கிரஸ் கட்சியினர் 52 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் டாஸ்மாக் மதுபான கிடங்கு அமைந்துள்ளது. இங்கு, சென்னையில் உள்ள 450-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்குக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியினர் நேற்று வந்தனர்.
கைகளில் பூட்டுகளுடன் வந்த 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை, கிடங்கின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாகவே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். காவல் துறையின் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவின் மாநில அமைப்பாளர் பி.வி. தமிழ்ச்செல்வன், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன், சென்னை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ரோமியோ, அம்பத்தூர் சர்க்கிள் துணை தலைவர் கே.வி. திலகர் உள்ளிட்ட 52 பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 52 பேரும், தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். அம்பத்தூர் டாஸ்மாக் மதுபான கிடங்குக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.