கரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 3-ம் தேதி வரை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வழங்கல் சேவை பாதியாகக் குறைக்கப்படுவதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண் பிரசாத் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விண்ணப்பதாரர்கள் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கில், பாஸ்போர்ட் சேவையின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆகையினால், வழக்கமாக வழங்கப்படும் பாஸ்போர்ட்களின் எண்ணிக்கையில் 50% மட்டுமே வழங்கப்படும். இந்த நடைமுறை வரும் 23 மார்ச் 2020 முதல் 03 ஏப்ரல் 2020 வரை நடைமுறையில் இருக்கும். ஆகவே, அவசரத் தேவை உள்ளவர்கள் மட்டுமே பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், காய்ச்சல், தலைவலி, சளி போன்ற நோய்த் தொற்றின் அறிகுறி உள்ளவர்கள் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கோ, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கோ வருவதைத் தவிர்க்கவும், பெற்றோர் பத்து வயதுக்கு உட்பட்ட சிறாரை பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு அழைத்து வருவதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அவசியத் தேவையின்றி பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பம் செய்வதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மதுரை பாரதி உலா வீதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட விசாரணை நடைமுறை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் விண்ணப்பதாரர்கள் தொலைபேசி எண் 0452 2521204, 0452 2521205 என்ற எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது rpo.madurai@mea.gov.in வாயிலாக பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.