கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மத்திய அரசி்ன் புள்ளி விவரங்கள் படி, இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒன்றாகக் கூடாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார நிறுவனம், இந்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்கீழ் தமிழக சுகாதாரத்துறை கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முயன்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்காக உடனடியாக நிதியும் ஒதுக்கப்பட்டு சிறப்பு வார்டுகள், கூடுதலாக பரிசோதனை மையங்களும் அமைக்கப்பட்டு சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் நாளை சுய ஊரடங்குக்கான அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றன. இந்தப் பணிகளை பிரதமர் மோடி அறிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (21.3.2020) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது பாராட்டுகளைத் தெரிவிதுள்ளார்.
அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார். நாளை (22.3.2020) பிரதமர் அறிவித்த 9 அம்சங்களும் தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.