கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தூத்துக்குடி மறை மாவட்டத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவர்களுக்கு இன்று (21-ம் தேதி) முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஞாயிறு மற்றும் தினசரி திருப்பலிகளில் பங்கெடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி பேராயர் ஏ. ஸ்டீபன் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவும் அபாயம் உள்ளதை அடுத்து அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசும் நாமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவது அனைவரும் அறிந்தது.
இதையொட்டி இன்று (21-ம் தேதி) முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஞாயிறு மற்றும் தினசரி திருப்பலிகளில் பங்கு எடுப்பதில் இருந்து இறைமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பமாக அமர்ந்து ஜெபமாலை ஜெபித்தல், இறைவார்த்தை வாசித்து தியானித்தல், திருப்பாடல்கள் இசைத்தல், கத்தோலிக்கம் சார்ந்த இணையதள சேவைகளை பயன்படுத்தி திரு வழிபாடுகளில் ஆன்மீக பங்கேற்பு செய்யலாம்.
தவக்காலத்தில் திட்டமிடப்பட்டிருந்த தியானங்கள், சிலுவைப் பாதைகள், அன்பிய கூட்டங்கள் மற்றும் அனைத்து வகையான பக்தி முயற்சிகள் ஆகியவற்றை மக்களின் நலன் கருதி தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தனியாக ஜெபிக்க விரும்புபவர்களின் நலன் கருதி பகலில் ஆலயங்களை திறந்து வைக்க வேண்டும். ஆலயத்துக்கு வருபவர்கள் தங்கள் கைகளை கழுவி தூய்மைப் படுத்திக்கொள்ள தண்ணீர், சோப்பு மற்றும் தடுப்பு திரவம் முதலியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.
10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வீடுகளில் உள்ள நோயாளிகளுக்கும், நடக்கமுடியாத முதியவர்களுக்கும் நோயில் பூசுதல் அருட்சாதனம் மற்றும் நற்கருணை வழங்குவதற்கு தடையில்லை.
அருட்பணியாளர்கள் தங்கள் உடலையும் கைகளையும் நோய் தடுக்கும் திரவத்தால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்க மக்கள் கூட்டமாக கூடுவதையும், ஒருவர் மற்றவர் இடத்திலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் தள்ளி நின்று பேசுவதையும், கரோனா வைரஸ் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், நோய் தடுக்கும் திரவம் வழியாக ஆலயங்கள், இல்லங்கள், நிறுவனங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தூய்மையாக வைத்திருப்பதும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.