கரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், சிவகாசி பகுதியில் உள்ள 1100 பட்டாசு ஆலைகளும் நாளை ஒரு நாள் செயல்படாது என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 2,76,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,406 பேர் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 275 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, இந்நோய் தடுப்பு குறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், நாளை (மார்ச் 22), ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
கரோனாவை எதிர்கொள்ள அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானது என்றும் அதனால் மக்கள் பொறுப்புடன் தங்களைத் தாங்களே கூடுமானவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், நாளை (மார்ச்.22) விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள 1100 பட்டாசு ஆலைகளும் நாளை ஒரு நாள் செயல்படாது என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.