தமிழகம்

அன்புமணிக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

செய்திப்பிரிவு

பாமக இளைஞரணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணிக்கு சென்னையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அன்புமணி நலமுடன் உள்ளார்.

இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அன்புமணி பாமக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகருக்கு சென்றிருந்தார்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை சில அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்தார். இந்த நிலையில் நேற்றிரவு அன்புமணிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் அவருக்கு குடல்வால் அழற்சி இருப்பது தெரியவந்தது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட அன்புமணிக்கு மாலை 5.00 மணியளவில் மருத்துவர் சுரேந்திரன் தலைமையிலான மருத்துவர்கள் குழு குடல்வால் அறுவை சிகிச்சை செய்தது. சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக உள்ளார். சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT