உலகமே கரோனா பாதிப்பால் அச்சத்தில் உறைந்திருக்கும் சூழலில், மிகவும் பாதுகாப்பான முறையில் `இந்து தமிழ்' நாளிதழ்களை மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர் நாளிதழ் முகவர்கள்.
மக்களுக்கு செய்திகளையும், தகவல்களையும் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு, வாசகர்களின் தேவைகளையறிந்து செயல்படும் `இந்து தமிழ்' நாளிதழ், தற்போதைய சூழலையும் மிகக் கவனமாக எதிர்கொண்டுள்ளது. கரோனா வைரஸ் தொடர்பாக சரியான தகவல்களை மட்டுமே மக்களிடம் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துவதுடன், நாளிதழ் தயாரிப்பு, அச்சிடல், விநியோகம், விற்பனை உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் வாசகர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டே மேற்கொள்கிறது.
பத்திரிகை அச்சகத்தில் தொடங்கி, வாசகர்களுக்கு விநியோகம் செய்வதுவரை சுகாதார நடவடிக்கைகள் முழு அளவில் கடைபிடிக்கப்படுகின்றன. அச்சிடும் காகிதம், இடுபொருட்கள் உள்ளிட்டவை கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல, முகவர்கள் மூலம் வாசகர்களுக்கு நாளிதழ்களை விநியோகிப்பதிலும் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வீடுகளுக்கு நாளிதழ்களை விநியோகம் செய்யும் முகவர்கள் மற்றும் அவர்களது பணியாளர்கள் மிகக் கவனமாகவும், பாதுகாப்பான முறையிலும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். முகவர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்த பின்னரே நாளிதழ்களைக் கையாள்கின்றனர். அனைத்து நாளிதழ்களும் வீடுகளுக்கு சென்றடையும்வரை கையுறை, முகக்கவசங்களுடனேயே பணிபுரிகின்றனர்.
இதுகுறித்து கோவை சின்னவேடம்பட்டி முகவர் ஏ.தேவானந்தம் கூறும்போது, ‘‘அதிகாலையில் பணிகளைத் தொடங்கும் முகவர்கள் மற்றும் ஊழியர்கள், கைகளை சோப்புபோட்டு கழுவிவிட்டு, பின்னர் கையுறை, முகக் கவசங்கள் அணிந்த பின்னரே நாளிதழ் கட்டுகளைப் பிரிக்கின்றனர். பின்னர் அவற்றை வீடுகளுக்கு கொண்டுசேர்க்கும்வரை கையுறை, முகக் கவசங்களைக் கழற்றுவதில்லை. அனைத்து ஊழியர்களுக்கும் போதுமான அளவுக்கு கையுறை,முகக் கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நாளிதழ் விநியோகத்தின்போது மக்களின் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம்’’ என்றார். முகவர்கள் மற்றும் ஊழியர்கள், கைகளை சோப்புபோட்டு சுத்தமாக கழுவி, பின்னர் கையுறை, முகக் கவசங்கள் அணிந்த பின்னரே நாளிதழ் கட்டுகளைப் பிரிக்கின்றனர்.