தமிழகம்

சிக்கன் பிரியாணியின் விலை குறையவில்லை: அசைவ பிரியர்கள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

கோழி இறைச்சி விலை கடுமையாக சரிந்துள்ள நிலையிலும், சிக்கன் பிரியாணி விலை குறையாததால், அசைவ பிரியர்கள் ஏமாற்றம்அடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று அச்சம் மற்றும் வதந்தி காரணமாககறிக்கோழி மற்றும் முட்டையின் விலை கடுமையாக சரிந்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்பு, கடைகளில் ஒரு கிலோ ரூ.220 வரை விற்றகோழி இறைச்சி தற்போது ரூ.50 அளவுக்கு குறைந்துள்ளது. மேலும், முட்டையின் விலை ரூ.3ஆக குறைந்துள்ளதால், கறிக்கோழி மற்றும் முட்டை உற்பத்தி செய்யும் பண்ணையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஆனால், சிக்கன் பிரியாணி விலை மட்டும் குறைக்கப்படாமல் உள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சாலையோரங்களில் உள்ள சிக்கன் பிரியாணி விற்பனை கடைகளில் ஆஃப் சிக்கன் பிரியாணி குறைந்தபட்சம் ரூ.90-ல் இருந்து ரூ.130 வரையும், பெரிய உணவகங்களில் ரூ.150 முதல் ரூ.250 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அசைவப் பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அசைவ பிரியர்கள் கூறியதாவது:

வெங்காய விலை உயர்வுக்கு முன்பு குஸ்காவின் விலை ரூ.40,பிரியாணியின் விலை ரூ.70-ஆகஇருந்தது. ஆனால், வெங்காயம் விலை உயர்வை காரணம்காட்டி குஸ்கா ரூ.60, பிரியாணி ரூ.120-ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல், பெரிய உணவகங்களிலும் பிரியாணி விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. ஆனால்,வெங்காய விலை குறைந்தும் பிரியாணியின் விலை குறைக்கப்படவில்லை.

தற்போது, ஒருகிலோ கறிக்கோழி விலை ரூ.50 அளவுக்கு குறைந்தும், வியாபாரிகள் பிரியாணி விலையை குறைக்காமல் தொடர்ந்து அதிக விலைக்கே விற்பனை செய்வது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT