எல்லா காய்ச்சலும், இருமலும் கரோனா இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதாரத் துறைச் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸால் தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து வந்த 45 வயதான காஞ்சிபுரம் பொறியாளர், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் மற்றும் அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது மாணவர் ஆகியோர் வைரஸ் பாதிப்புடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து உரிய சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைரஸ் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளை பார்வையிட்டார். இதேபோல, சென்னை விமான நிலையம், தாம்பரம் ரயில் நிலையத்தில் வைரஸ் தடுப்பு பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் செந்தில்ராஜ் உடன் இருந்தனர்.
இந்நிலையில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், “இந்த கரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக கரோனாவாக இருக்குமோ என்று அச்சமடையத் தேவையில்லை. எல்லா காய்ச்சலும், இருமலும் கரோனாவுக்கான அறிகுறி இல்லை. இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் இருந்து வந்தவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகிய மூன்றும் இருந்தால், உடனே மருத்துவவரை அணுக வேண்டும். உங்களை பரிசோதனை செய்துவிட்டு தேவை என்றால் மருத்துவர் உங்கள் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக எடுப்பார். எல்லா காய்ச்சல், இருமலுக்கும் மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.