கரோனாவை தடுப்பது என்பது தனிமனித கடமை என்பதால் நீதிமன்றங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை
கரோனாவை தடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அது தனி மனித கடமையும்கூட. நாம் சமுதாயமாக கூடிவாழ்ந்து பழகியுள்ளோம். தற்போது ஒன்றுகூடுவதால் பரவும் கரோனா பாதிப்பையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்த இக்கட்டான சூழலில் உலகமே மிகப்பெரிய அச்சுறுத்தலில் உள்ளது. நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக நீதிமன்றங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் அதிக இடைவெளியுடன் இருக்க வேண்டும். சமூகத்தில் தனி்மைப்படுத்தப்படுவது என்பது இயலாத காரியம். இதற்கு பெரும் முயற்சி தேவை. ஆனால் இது தற்காலிகமான தேவை என்பதை புரிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் நமக்கு மிகவும் முக்கியமானது. இனிவரும் நாட்கள்தான் நமக்கு முக்கியமானவை.
எனவே சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கரோனாவை முற்றிலுமாக தடுக்கும் விதமாக நமக்கும், சமூகத்துக்கும் பேருதவி புரிய வேண்டும்.