மேல்மலையனூர் கோயிலில் 2 மாத ஆண் குழந்தையை கடத்தியதாக ஓசூரைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் திருவிக தெருவைச் சேர்ந்த ஜோதிடர் கார்த்திகேயன் (24). இவரது மனைவி அபிராமி (23). இவர்களுக்கு மகன் தினேஷ் குமார்(3), மகள் கிருத்திகா தேவி மற்றும் ஸ்ரீ ஹரி என்ற 2 மாத ஆண் குழந்தை உள்ளனர். கோயில் திருவிழாக்களுக்கு சென்று பக்தர்களுக்கு ஜோதிடம் கூறுவது கார்த்திகேயன் வழக்கம். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளம்மன் கோயிலுக்கு ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழாவையொட்டி குடும்பத்தினருடன் கார்த்திகேயன் வந்திருந்தார்.
கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் தங்கும் இடத்தில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் பார்த்தபோது ஸ்ரீ ஹரி காணாததால் திடுக்கிட்டனர். உடனே, பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரித்தனர். அப்போது, குழந்தையுடன் செஞ்சிக்கு ஒரு பெண் ஆட்டோவில் சென்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த பெண்ணை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறி அந்த பெண்ணுக்குத் தெரியா மல் போலீஸ் நிலையம் செல்லுமாறு கூறினர். பின்னர், கார்த்திகேயன் குடும்பத்தினரை மற்றொரு ஆட்டோவில் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்த னர். இதற்கிடையே, குழந்தையுடன் சென்ற அந்த பெண்ணை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த ஆட்டோ ஓட்டுநர் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், குழந் தையை கடத்திச் சென்றதை அந்த பெண் ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்துக்குள் போலீஸ் நிலையத் துக்கு வந்த கார்த்திகேயன் தம்பதி யிடம் குழந்தையை போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடை பெற்ற விசாரணையில், குழந் தையை கடத்திச் சென்ற பெண்ணின் பெயர் தமிழரசி (40) என்றும் ஓசூர் அருகே உள்ள பூனம்பள்ளியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் வளத்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.