தமிழகம்

5000 மரங்களை வெட்டத் தடை கேட்ட இருவருக்கு தலா ரூ.10000 அபராதம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கி.மகாராஜன்

மயிலாடும்பாறையில் 5 ஆயிரம் மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்த இருவருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

தேனி வருசநாடு பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா, சின்னத்தங்கம் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "வருஷநாடு பகுதியில் மயிலாடும்பாறை பகுதியில் 64 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கு வளர்ந்த மரங்கள் உள்ளன. இந்த மரங்களால் மயிலாடும்பாறை பகுதி பசுமையாக உள்ளது.

இந்நிலையில் இந்த மரங்களை வெட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெரும்பாலான மரங்கள் இருபது முப்பது ஆண்டுகள் கடந்தவை. ஒரு சில மரங்கள் நூறு ஆண்டுகள் கடந்தது. இந்த மரங்களை வெட்டினால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மட்டம் குறையும். எனவே மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும்"எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அடங்கிய அமர்வு, "மரங்கள் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளன. இது தொடர்பாக வழக்குகள் உள்ளன. இதை கருத்தில் கொள்ளாமல் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எனவே மனுதாரர் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை இருவரும் 2 வாரத்தில் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT