ராமதாஸ்: கோப்புப் படம். 
தமிழகம்

முரசொலி விவகாரம்: ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

முரசொலி நில விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் திமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், அவதூறு வழக்கில் மார்ச் 20-ம் தேதி நேரில் ஆஜராக ராமதாஸுக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

இந்நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று (மார்ச் 20) விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராமதாஸுக்கு விலக்களித்தும், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டு, விசாரணையை 4 வார காலத்திற்குத் தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT