படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

தடை உத்தரவால் அனுமதி மறுப்பு: வளைகாப்பை மீனாட்சியம்மன் கோயில் முன் நடத்திய தம்பதி- மதுரையில் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சியம் கோயிலுக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கர்பிணிப் பெண் ஒருவருக்கு கோயிலின் முன்னால் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் பெரிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மக்கள் வருகை மார்ச் 31-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று (மார்ச் 20) காலை 8 மணி முதல் மார்ச் 31 வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆகம விதிகளின்படி ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோயிலுக்கு பக்தர்கள் வர விதிக்கப்பட்டுள்ள தடையை அறியாமல் மதுரையைச் சேர்ந்த இளம் தம்பதி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சியை கோயிலில் நடத்த வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கர்ப்பிணிப் பெண் ஏமாற்றமடைந்தார்.

அதனால் அவரை சமாதானப்படுத்த குடும்பத்தினர், கோயிலுக்குள் செல்ல முடியாவிட்டால் என்ன கோயில் முன் அமர்ந்தாவது வளைகாப்பை செய்து கொள்கிறோம் என்று நெகிழ்ச்சி பொங்க விழாவை நடத்தினர். இது காண்போரை நெகிழச் செய்தது.

பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

கோயில் நுழைவு வாயில்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கல் வருகை இல்லாவிட்டாலும் கூட கோயிலைச் சுற்றிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT