தமிழகம்

விமான பெட்ரோல், கோழித் தீவன தேவையில் சரிவு; சரக்கு புக்கிங் கிடைக்காமல் 40% வரை லாரிகள் பாதிப்பு: வங்கிக் கடன் தவணை செலுத்த ஆகஸ்ட் வரை விலக்களிக்க கோரிக்கை

எஸ்.விஜயகுமார்

கரோனா வைரஸ் பிரச்சினையால், விமான பெட்ரோல், கோழித் தீவனம் தேவையில் சரிவு உள்ளிட்ட காரணங்களால், லாரி சரக்குப் போக்குவரத்து 30 முதல் 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தனராஜ் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வர்த்தக நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் லாரி போக்குவரத்துத் தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன மாநில பொருளாளர் தனராஜ் தெரிவித்துள்ளார்.

லாரி தொழிலின் பிரச்சினை குறித்து அவர் மேலும் கூறியதாவது:

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்துவிட்டது. உற்பத்திப் பொருட்களை லாரிகள் மூலம் துறைமுகங்களுக்கு கொண்டு செல்வது குறைந்துவிட்டது. சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, கல்மாவு, இரும்புத் தளவாடப் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வது போன்றவையும் குறைந்துவருகிறது.

இதேபோல், வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனாவில் இருந்து பல்வேறு வகையான இயந்திரங்கள், தொழில்துறைக்கான கச்சாப் பொருட்கள் வரத்தும் நின்றதால், வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பும் லாரிகளுக்கு சரக்கு கிடைப்பதில்லை.

சேலத்தை அடுத்த சங்ககிரியில் உள்ள பெட்ரோலிய பிளான்ட்டில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு, நாளொன்றுக்கு 20 டேங்கர் லாரிகளில் விமானங்களுக்கான பெட்ரோல் கொண்டு செல்லப்படும். வெளிநாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், தற்போது நாளொன்றுக்கு 2 டேங்கர் லாரிகளில் மட்டுமே விமான பெட்ரோல் எடுத்துச் செல்லப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தினமும் 100 லாரிகளில் கோழித் தீவனம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் கோழிப்பண்ணைத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கோழித்தீவன வரத்தும் முடங்கிவிட்டது. இதுபோன்று காரணங்களால் லாரி சரக்குப் போக்குவரத்துத் தொழில் 30 முதல் 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு புக்கிங் கிடைக்காமல் திரும்பும் லாரிகளுக்கு ஏற்படும் டீசல் செலவு, சுங்கக் கட்டண செலவு உள்ளிட்டவற்றால், உரிமை யாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், லாரிகளுக்கான வங்கிக் கடன் தவணையை செலுத்த முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.

எனவே, லாரிகளுக்கான கடன் தவணையை செலுத்துவதற்கு ஆகஸ்ட் மாதம் வரை, அவகாசம் வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்’ என்றார்.

SCROLL FOR NEXT