துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த 144 பயணிகள் மதுரையில் 3 கரோனா வைரஸ் தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
துபாயில் இருந்து நேற்று மாலை தனியார் விமானம் மூலம் 144 பயணிகள் மதுரை வந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். காய்ச்சல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் இவர்கள் 5 அரசுப் பேருந்துகளில் கரோனா வைரஸ் தடுப்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உறவினர்கள் உள்ளிட்ட யாரையும் அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பரிசோதனையின்போது காய்ச்சல், இருமல், சளி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கரோனா அறிகுறி தென்பட்டால் தேனி மருத்துவக் கல்லூரி ஆய்வகத்துக்கு ரத்தம், சளி மாதிரிகளை அனுப்பவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளுக்காக பெருங்குடி அஞ்சல் பயிற்சி மையம், சின்ன உடைப்பு கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையம், ஆஸ்டின்பட்டி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி என 3 இடங்கள் கரோனா தடுப்பு சிகிச்சை மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளால் மக்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். சிலர் 2 நாட்களில் அனுப்பப்படுவர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்தால் 14 நாட்கள் தங்க வைக்கப்படுவர்.
இப்படி தங்குவோருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. தேவைப்பட்டால் மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மருத்துவத் துறை வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று கூறினார்.