சவுந்தர் 
தமிழகம்

யூடியூப் வீடியோ மூலம் காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன் கைது

செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டி அருகே யூடியூப் வீடியோ மூலம் காதலிக்கு பிரசவம்பார்த்த காதலன் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கம்மார்பாளையத்தைச் சேர்ந்தவர் சவுந்தர் (27). இவர், கும்மிடிப்புண்டியில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வருகிறார். சவுந்தரும், கம்மார்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரும் உறவினர் ஆவர்.

சவுந்தரும் கல்லூரி மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு, சவுந்தரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் காரணமாக மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதை மாணவி தன் வீட்டில் மறைத்து வந்துள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்று கருவை கலைத்தால், வெளியே தெரிந்துவிடும் என்பதால், மாணவிக்கு தானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியே எடுத்து வீசி விடலாம் என சவுந்தர் முடிவெடுத்தார். இதற்காக கடந்தசில நாட்களாக பிரசவம் தொடர்பான வீடியோக்களை யூடியூப்-ல் பார்த்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையம் காப்புக் காட்டுக்கு மாணவியைசவுந்தர் அழைத்துச் சென்றார். அங்கு, கல்லூரி மாணவிக்கு சவுந்தர் பிரசவம் பார்த்தார். அப்போது கையால் குழந்தையை பிடித்து இழுத்தபோது, குழந்தையின் ஒரு கை துண்டானது. இதனால், அதிர்ச்சியடைந்த சவுந்தர், குழந்தையின் கையை காட்டிலேயே வீசியதாக கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை

இதையடுத்து மாணவி ஆபத்தான கட்டத்தை நெருங்கவே, அச்சமடைந்த சவுந்தர், அவரை மோட்டார் சைக்கிளில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்த மாணவி சென்னை, ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, மாணவிக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம் இறந்த நிலையில் இருந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் எடுத்தனர். தொடர்ந்து, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பாதிரிவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சவுந்தரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT