கரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளியூர் பயணத்தை மக்கள்தவிர்த்து வருவதால், தெற்கு ரயில்வேயில் 47 ரயில்கள் உட்பட நாடு முழுவதும் 155-க்கும் மேற்பட்ட விரைவு, சுவிதா ரயில்களின் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றுமத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறைந்துள்ளது.
ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளை பலரும் ரத்து செய்து வருகின்றனர். ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை சுமார் 35 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை குறைவதால், விரைவு ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 2-வது நாளாக நேற்று 84 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் 155-க்கும் அதிகமான விரைவு ரயில்களின் சேவைகள் இன்று (20-ம் தேதி) முதல் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிறப்பு கட்டண ரயில்கள், சுவிதா சிறப்பு ரயில்கள், சுற்றுலா தலங்களை இணைக்கும் ரயில்கள், மும்பை - அகமதாபாத், டெல்லி - லக்னோ தேஜஸ் ரயில்கள், இந்தூர் - வாரணாசி ஹம்சஃபர் சொகுசு ரயில் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தெற்கு ரயில்வேயில் 47 ரயில்கள்
தெற்கு ரயில்வேயில், விழுப்புரம் - செகந்திராபாத் - விழுப்புரம் வாராந்திர ரயில்கள் (06043/44), சென்னை - விஜயவாடா சதாப்தி (12077), திருவனந்தபுரம் - கண்ணூர் (12082) சதாப்தி, சென்னை - கோவை - சென்னை சதாப்தி ரயில்கள் (12243/44), சென்னை - திருவனந்தபுரம் (12697), சென்னை - பெங்களூரு (22625), திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/28) உட்பட 22 விரைவு ரயில்கள் இம்மாத இறுதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, தூத்துக்குடி - சென்னை எழும்பூர் (82604/06004), தாம்பரம் - நாகர்கோவில் (06005), வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (06016), திருநெல்வேலி - தாம்பரம் (06036), தாம்பரம் - திருநெல்வேலி (82615), எர்ணாகுளம் - ராமேசுவரம் (06045) உட்பட 25 சிறப்பு கட்டணம், சுவிதா சிறப்பு ரயில்களின் சேவை வரும் ஏப்ரல் 6, 13, 20 தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.