முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் தி.நகர் ரங்கநாதன் தெரு வெறிச்சோடிப் போயுள்ளது.  
தமிழகம்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31-ம் தேதி வரை கடைகள் மூடல்; வெறிச்சோடிய ரங்கநாதன் தெரு- ஊருக்கு சென்ற 3,000 ஊழியர்கள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் சிறு கடைகளைத் திறக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பெரியகடைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சொந்தஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் சுமார் 100 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள சிறு கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையின் வர்த்தக கேந்திரமாக தியாகராய நகர் விளங்குகிறது. இங்குள்ள ரங்கநாதன் தெருவில் 5-க்கும் மேற்பட்ட பெரிய கடைகள் உட்பட சுமார் 300 கடைகள்இயங்கி வருகின்றன. இத்தெருவுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் எப்போதும் நெரிசலாக இருக்கும்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பருவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகமாக கூடும்வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31-ம்தேதி வரை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கடைகளும் மூடல்

இதைத் தொடர்ந்து நெரிசல் மிகுந்த பகுதியான ரங்கநாதன் தெருவில் பெரிய வணிக வளாகங்கள் மட்டுமல்லாது, சிறு கடைகளையும் மூடுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதை ஏற்ற கடைக்காரர்கள், கடந்த 3 நாட்களாக ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகியவற்றில் சாலையோர கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூடியுள்ளனர்.

இதனால் இவ்விரு சாலைகளும் நேற்று ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. விவரம் தெரியாத, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம பொதுமக்கள், ரயில்கள் மூலமாக ரங்கநாதன் தெருவுக்கு வந்து ஏமாற்றத்துடன் நேற்று திரும்பிச் சென்றனர். பெரிய கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

இந்தத் தெருவில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். பெரிய கடைகளில் வேலை செய்வோர் அனைவரும் வெளிமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அருகில் உள்ள இடத்தில் இலவச தங்கும் வசதி, இலவச உணவு வழங்கப்படுகிறது.

தற்போது மார்ச் 31-ம் தேதி வரை கடைகளை திறக்க அரசு தடை விதித்த நிலையில், கடந்த 15 நாட்கள் வேலை செய்ததற்கான ஊதியத்தை வழங்கி, அனைத்து ஊழியர்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவிட்டனர். அழைக்கும்போது வந்தால் போதும் என்று ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.

வாழ்வாதாரம் பாதிக்கும்

இதுகுறித்து ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க இணை செயலர் ஏ.சர்புதீன் கூறியதாவது:

ரங்கநாதன் தெருவில் வரும் மக்களில் 20 சதவீதத்தினர் மட்டுமே கடைகளுக்கு வருகின்றனர். 80 சதவீதம் பேர், ரயில்களில் வந்திறங்கி, தியாகராய நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

அரசின் அறிவுறுத்தலால் கடைகளை மூடி இருக்கிறோம். 15 நாட்கள் மூடினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் சுமார் 100 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள சிறு கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.

தெருவின் இரு புறங்களிலும், சங்கத்தின் சார்பில் கூட சானிடைசர், முகக் கவசம் போன்றவற்றை இலவசமாக வழங்கவும், தெர்மல் ஸ்கேனர் மூலமாக பரிசோதனை செய்து பொதுமக்களை அனுமதிக்கவும் தயாராக இருக்கிறோம்.இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT