தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சுய உதவிக்குழு பெண்கள் மூலம் முகக் கவசம் தயார் செய்யத் தொடங்கியுள்ளோம். விரைவில் கிருமி நாசினியும் (சானிடைசர்) தயாராக உள்ளது என்று புதுச்சேரி ஆட்சியர் அருண் கூறியுள்ளார்.
புதுச்சேரி ஆட்சியர் அருண் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கரோனா வைரஸ் தொடர்பாக தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வக்பு வாரியம், இந்து அறநிலையத்துறை, தேவாலயங்கள் தரப்பில் அனைவரையும் அழைத்துப் பேசினோம். கோயில், மசூதி, சர்ச்சுகளில் விழிப்புணர்வு வாசக பேனர்களை வைக்க உத்தரவிட்டுள்ளோம். கிருமி நாசினிகள், கைகழுவும் வசதி ஏற்படுத்த தெரிவித்துள்ளோம். அதேபோல் கடைகளிலும் கிருமி நாசினி, கை கழுவும் ஏற்பாடு செய்யத் தெரிவித்துள்ளோம். பல கடைகளில் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் முகக் கவசம், கைகளைத் துடைக்கும் கிருமி நாசினி (சானிடைசர்) தட்டுப்பாடு உள்ளது. அதனால் சுய உதவிக்குழு பெண்கள் குழு மூலம் முகக் கவசம் தயார் செய்ய நடவடிக்கை எடுத்தோம்.
தற்போது நாள்தோறும் 10 ஆயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு முகக் கவசத்தின் விலை 3 ரூபாய். 10 நாட்களுக்கு 1 லட்சம் முகக் கவசம் கிடைக்கும். முதலில் சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் போலீஸாருக்குத் தர உள்ளோம். இதன் தட்டுப்பாடு குறையும்.
அதையடுத்து கை துடைக்கப் பயன்படுத்தும் கிருமி நாசினி தட்டுப்பாடு உள்ளது. அதையும் தயார் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். 4 இடங்களில் செய்ய உள்ளனர். தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இது தொடர்பான பயிற்சி தரப்பட்டு சுய உதவிக்குழு பெண்கள் மூலம் செய்யப்படும். அதன் தட்டுப்பாடு விரைவில் இருக்காது''.
இவ்வாறு புதுச்சேரி ஆட்சியர் அருண் தெரிவித்தார்.