கரோனா பரவுவதைத் தடுக்க இந்திய ரயில்வே சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில் டிக்கெட்டுகளில் குறிப்பிட்ட சில பிரிவினரைத் தவிர மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிக்கெட் சலுகை இன்றிரவு முதல் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதைத் தடுக்க, இந்திய ரயில்வே கீழ்க்காணும் கூடுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது:
* அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளாமல் இருக்கச் செய்யவும். எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய மூத்த குடிமக்கள் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தடுக்கவும். நோயாளிகள், மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் தவிர, மற்ற அனைவருக்கும் முன்பதிவு அல்லாத மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட பிரிவுகளில் வழங்கப்பட்டு வரும் டிக்கெட் கட்டணச் சலுகை மார்ச் 20-ம் தேதி 12 மணியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
* தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளாமல் இருக்கச் செய்யவும. ரயில்களில் அதிகக் கூட்டம் ஏறுவதைத் தடுக்கவும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறைந்த அளவு பயணிகள் பயணம் செய்யக்கூடிய 155 ஜோடி ரயில்கள் மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு பயணியும் பாதிக்கப்படாத வகையிலும், பயணிகளுக்கான மாற்று ரயில் வசதியை பொருத்தும், ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரத்து செய்யப்பட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
* கல்வி நிலையங்கள் திடீரென மூடப்பட்டதால், வடமாநிலங்களில் பயிலும் மாணவர்கள், தென்மாநிலங்கள், கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள தங்களது வீட்டிற்குத் திரும்புவதற்கான வசதிகளை இந்திய ரயில்வே செய்து கொடுத்துள்ளது.
* தேவையற்ற ரயில் பயணங்களைத் தவிர்ப்பதோடு, காய்ச்சல் உள்ளவர்கள் பயணம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ரயிலில் பயணிக்கும்போது, காய்ச்சல் இருப்பதாக உணர்ந்தால் அந்த பயணி உடனடியாக ரயில்வே பணியாளர்களை அணுகி மருத்துவ உதவி மற்றும் இதர உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
* கோவிட்-19 பரவுவதன் காரணமாக ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டம் சேருவதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக கோட்ட ரயில்வே மேலாளர்கள், ரயில் நிலைய நிலவரங்களை ஆய்வு செய்து தேவையான இடங்களில் பிளாட்பாரக் கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* பயணிகள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில் நிலையங்கள் & ரயில்களில் அறிவிப்பு வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது:
* கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* சமுதாய இடைவெளியைப் பராமரித்தல் & தும்மல் அல்லது இருமல் வரும்போது வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
* ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். (பயணம் செய்யாமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்)
* பொது இடங்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் எச்சில் துப்பக்கூடாது.
* அளவுக்கு அதிகமாகக் கூடுவதைத் தவிர்ப்பதோடு, புறநகர் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் பயணிகள் இடையே உரிய இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.