அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்க்க பார்வையாளர்கள் அவசியம் இல்லாமல் வர வேண்டாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் ‘கரோனா’ வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.
‘கரோனா’ வைரஸ் அறிகுறியுள்ள நோயாளிகள் இந்த வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு ரத்தப்பரிசோதனை, சிகிச்சை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு ‘கரோனா’ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுகின்றனர்.
அதனால், தற்போது அரசு மருத்துவமனைகளில் ‘கரோனா’ வைரஸ் பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் சங்குமணி கூறுகையில், ‘‘நோயாளிகள் உயிர் காக்கும் சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகளுக்கு அந்தந்த பகுதி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலே சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நெடுநாளைய நோய் மருந்து மாத்திரைகள் இதுவரை 14 நாட்களுக்கு வழங்குவோம். தற்போது 28 நாட்களுக்கு வழங்க அறிவுறுத்தியுள்ளோம்.
இதன் பிறகு இந்த மருந்துகளை வாங்க அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வர வேண்டாம். அதையும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே வாங்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளைப் பார்க்க அவசியம் இல்லாமல் பார்வையாளர்கள் வர வேண்டாம்.
மருத்துவர்கள், வருகை பதிவேட்டில் கையெழுத்திட அரசு மருத்துவமனை அலுவலகத்திற்கு வர வேண்டாம். தாங்கள் சிகிச்சை பெறும் வார்டுகளிலேயே வருகையை உறுதி செய்து கொள்ளலாம்.