‘‘ஹோட்டல்களில் உணவு பரிமாறுகிறவர்கள் கண்டிப்பாக முகக்கவசங்கள் அணிந்திருக்க வேண்டும், ’’ என்று ஹோட்டல் நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால், தொடர்ந்து மக்கள், பஸ், கார், ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள், ஒரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு வாகனங்களில் செல்லும்போது பயணங்களில் ஹோட்டல்களில் சாப்பிடுகின்றனர்.
தற்போது வரை ஹோட்டல்களில் உணவுகள் பரிமாறும் ஊழியர்கள் முகக்கவசம் அணிவதில்லை. சரியான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமலேயே பணிபுரிகின்றனர்.
ஹோட்டல்களில், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள், ஹோட்டல்களில் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு ‘கரோனா’ தொற்று இருக்கலாம். அதுபோல், உணவு பரிமாறும் ஊழியர்களுக்கும் ‘கரோனா’ தொற்று இருக்கலாம்.
அதனால், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றுமாறு தமிழக சுகாதாரத்துறை உத்தரவுபடி மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை இன்று ஹோட்டல்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘மாநகராட்சி பகுதிகளில் உள்ள உணவக உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வரும்பொழுது கைகளை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்து கை கழுவி வருமாறு அறிவுறுத்த வேண்டும்.
சமையல் அறையில் இருப்பவர்களும் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். கிருமி நாசினிகள் கொண்டு உணவகங்கள் முழுவதும் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் விடுமுறை அளித்து ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து பரிமாற வேண்டும், ’’ என்றார்.