தமிழகம்

வர்த்தக நிறுவனங்களை முற்றிலும் மூடாமல் நேர அளவு நிர்ணயித்து வியாபாரத்துக்கு அனுமதி: எந்தெந்த கடைகளை மூடுவது என்பதை தெளிவுபடுத்த கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் த.வெள்ளையன் திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வணிக நிறுவனங்கள், கடைகளை மூட வேண்டும் என தெரிவிக்கின்றனர். சில்லறை வர்த்தகம் கடும் சரிவில் உள்ள நிலையில் இது வணிகர்களை மேலும் பாதிக்கும். எனவே, குறிப்பிட்ட நேர அளவை நிர்செய்து அந்த நேரத்துக்குள் வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருச்சியில் கூறும்போது, “வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சிறிய வணிக நிறுவனங்களையும், கடைகளையும் மூடுமாறு வியாபாரிகளை அதிகாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர். காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை மூடினால் மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

இதுகுறித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு வகையில் உள்ளது. எனவே, எந்தெந்த கடைகளை மூட வேண்டும், எவற்றை திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை முறைப்படுத்தி, மாநில அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். கடைகளுக்கு சீல் வைக்கக் கூடாது” என்றார்.

SCROLL FOR NEXT