குடிமராமத்து திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 865 ஏரிகள் ரூ.930 கோடியே 76 லட்சத்தில் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன. 2020-21-ம் ஆண்டில் ரூ.499 கோடியே 70 லட்சத்தில் 1,364 ஏரிகள் தூர்வாரப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை நேற்று தொடங்கிவைத்துப் பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, “குடிமராமத்து திட்டத்தை மிகப் பெரிய சாதனையாக கூறி வருகிறீர்கள். முதல்வரை 'குடிமராமத்து நாயகன்' என்றெல்லாம் அதிமுக உறுப்பினர்கள் அழைக்கின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை என்னென்ன பணிகள், எந்தெந்த இடங்களில், எவ்வளவு செலவில் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றிய விவரங்களை வெளியிடாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 ஆயிரம் ஏரிகளை தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரைகளைப் பலப்படு்த்தி அதில் மழை நீரை சேமிக்கவே குடிமராமத்து திட்டம் 2016-17-ல் சோதனை முறையில் தொடங்கப்பட்டது. 2016-17-ல் ரூ.100 கோடியில் 30 மாவட்டங்களில் 1,513 ஏரிகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டன. முதல் ஆண்டில் ஒவ்வொரு ஏரிக்கும் குறிப்பிட்ட அளவு தொகை மட்டுமே வழங்கப்பட்டன.
குடிமராமத்து திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததால் 2017-18-ல் 30 மாவட்டங்களில் ரூ.331 கோடியே 7 லட்சத்தில் 1,523 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,463 பணிகள் முடிக்கப்பட்டன. 15 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. பல்வேறு காரணங்களால் 45 பணிகள் கைவிடப்பட்டன.
2019-20-ல் ரூ.499 கோடியே 69 லட்சத்தில் 1,829 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 1,094 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 718 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட 17 பணிகளுக்குப் பதிலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 3.83 கோடியில் 20 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.930 கோடியே 76 லட்சத்திவ் 4 ஆயிரத்து 865 ஏரிகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. இப்போது ஏரிகள் தூர்வார தேவையான நிதி முழுவதும் வழங்கப்படுகிறது. 2020-21-ம் ஆண்டில் ரூ.499 கோடியே 70 லட்சத்தில் 1,364 ஏரிகளைத் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. ஏரி பாசனத்தால் பயன்பெறும் விவசாயிகளை உள்ளடக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒப்பந்தப்புள்ளி கோராமல் விவசாயிகளுக்கு நேரடியாக காசோலை மூலம் பணம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.